Showing posts with label பழமொழி. Show all posts
Showing posts with label பழமொழி. Show all posts

Saturday, February 7, 2009

ஆமை புகுந்த வீடு உருப்படாது....


இன்றைய நிலவரம்:
இந்த பழமொழியைச் சொல்லியே உலகில் அதிக நாள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆமையை ராசி இல்லாத மிருகத்தின் அடையாளமாகச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறோம்.
நமது முன்னேற்றத்தை அது தடுப்பதாக பழி சுமத்திக் கொண்டிருக்கிறோம்.

முன்னோர் சொன்னது:
கல்லாமை,உண்மை பேசாமை,பெரியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை போன்ற ஆமைகள் புகுந்தால் அந்த வீடு முன்னேறுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.எனவே, இந்த இல்லாமைகள் அகற்றி வாழ்க்கையில் இன்புற வேண்டும்

ஒரு சிறிய ஆய்வு:
ஆமையின் அதிகப்பட்ச வேகம் நிமிடத்திற்கு 14 அடி தூரமாகும்.இந்த வேகத்தில் வரும் ஆமை வீட்டின் சுற்றுச் சுவரின் முகப்புவாயிலின் வழியே முற்றம் கடந்து,திண்ணை தாண்டி, படியில் ஏறி, வாசலுக்குள் நுழைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை யூகித்துகொள்ளுங்கள். அவ்வளவு நேரம் ஒரு வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமலும்,வீட்டில் உள்ளவர்கள் சோம்பலோடும்,வாசல் கதவு திறந்தும் கிடந்தால் அந்தவீடு சிறக்க எந்த வகையிலாவது வாய்ப்பு உண்டா என்பதையும் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

நீதி:
விலங்குகளின் மேல் பழி போடாமல்
நம்மைத் திருத்திக் கொண்டாலே நன்மை பிறக்கும்

Friday, January 30, 2009

களவும் கற்று மற...!!



நீதிமன்றம்.
தீர்ப்பு நேரம்.
குற்றவாளிக் கூண்டில் திருடன்.
நீதிபதி :"கடைசியாக எதும் சொல்ல விரும்புகிறாயா?"
குற்றவாளி :
"ஆமாம் அய்யா,பெரியவங்களே சொல்லி இருக்காங்க 'களவும் கத்து மற'ன்னு .அதலானதான் செஞ்சுபுட்டேன்.
இனிமே திருட மாட்டேன்,இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுருங்கய்யா"

நீதிபதி குழம்பிப் போகிறார்
'இப்படி ஒரு பழமொழி எப்படி வந்தது?
எதற்காக வந்தது?
எல்லா கலைகளையும் கற்றுக்கொள் என்று அறிவுறுத்த அப்படி சொல்லி இருப்பார்களா? முன்னோர் வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டாமா?'

விடை தெரியவில்லை.குழப்பம் நீடிக்கிறது

இன்றைய நிலவரம் :-
எல்லாதரப்பினரையும் குழப்பும் வண்ணம் புரையோடிப்போய் கிடக்கிறது அந்தப் பழமொழி

உண்மை நிலவரம் :-
"களவும் கத்தும் மற"என்பது தான் அந்த உண்மையான பழமொழி
திருட்டையும் பொய்பேசுவதையும் (கத்து=பொய் சொல்லல்)மறக்க வேண்டுமமென்பதே இதன் பொருள்.
இது காலப்போக்கில் 'களவும் கற்று மற' என்று மருவி இருக்கிறது அல்லது மாற்றி இருக்கிறார்கள்

உணர்த்தும் உண்மை :- திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் காலப் போக்கில் உண்மை பொல மாறி விடுகிறது

Wednesday, January 14, 2009

தை பிறந்தால் வழி.....!?


முன்னோர் மொழி : "தை பிறந்தால் வழி பிறக்கும் "

நடை முறை : ." இப்போ ஏன் வீணா முயற்சிப் பண்ணிக்கிட்டு.
தை பொறக்கட்டும் அப்புறமா பாக்கலாம்"

"தை பொறந்தா ஏதாவது வழி பொறக்காமலா போயிரும்"

இப்படிச் சொல்லிகொண்டு தான்
இன்றைய தலைமுறை செல்வங்கள்
இயலாமையால் சோம்பிப் போய் கிடக்கின்றனர்.
கொடுக்கும் சாமி எப்படியும்
கூரையைப் பிய்த்துக்கொண்டுதான் கொடுக்கும்,
ஏன் அவருக்கு சிரமம்
,
என்று கூரையை பிரித்துவைத்து, வானம் பார்த்து, வாய் பிளந்து காத்திருப்போரும் இருக்கிறார்கள்.முன்னோர் வாக்கை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் வாழ்க்கை இழந்து கொண்டிருக்கிறார்கள்

உண்மையில் : அக்காலத்தில் வயல் வெளியில் தை மாதத்தில் கதிர்கள் அறுவடைக்குத் தயாராகி, தலை சாய்த்து, வரப்புகளின் மேல் படர்ந்து, நடந்து செல்ல வழி இல்லாமல், பாதைகளை மறைத்து இருக்கும்.தையில் அறுவடை முடிந்த பிறகே மேற்கொண்டு தொடர்ந்து செல்ல வழி பிறக்கும்.
மேலும் அறுவடை முடிந்த பின்புதான் கடனில் மூழ்கி இருக்கும் விவசாயின் வாழ்க்கையிலும் நல்ல வழி பிறக்கும்

உணர்த்தும் நிலவரம் : இந்த தையில் விழித்து உழைக்க அரம்பித்தால் அடுத்த தையில் பலரது வாழ்க்கையில் வழிபிறக்க காரணமாய் இருக்கலாம்

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

Sunday, September 21, 2008

பூனை குறுக்கே போனால்......

இன்றைய நிலமை:
பூனை குறுக்கேபோனால் சகுனம் சரியில்லை என தலையில் கை வைத்து உட்க்கார்ந்து விடுவோம் நம்மில் பாதி பேர்.
திரும்பி வந்து, தண்ணீர் குடித்து, இழைப்பாறி பின் செல்வோம் மீதி பேர்.
உண்மையில்:
காட்டு வழியே பயணம் செல்லும்போது, சிங்கம் ஏதேனும்( பூனை இனத்தைச் சார்ந்தவை ) நாம் போகும் பாதைக்குக் குறுக்கே செல்ல வாய்ப்புண்டு.சிங்கங்கள் ஒரு வெற்றிடத்தை கடக்க நேர்கையில்,பொதுவாக புதர் மறைவிலோ அல்லது மரத்தின் அடியிலோ சிரிது நேரம் தங்கி தனது பாதுகாப்பை உறுதிசெய்த பின்னரே தொடர்ந்து செல்லும்.அவ்வாறு அது காத்திருக்கும் நேரத்தில் நாம் அதன் அருகே செல்ல நேர்ந்தால் சிங்கத்தால் நாம் தாக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

எனவே தான் சிங்கம் குறுக்கே போவதை பார்க்க நேர்ந்தால்,அது தங்கிச் செல்லும் நேரம் தவிர்க்க,நம்மையும் காப்பாற்றிக்கொள்ள சிறிது நேரம் நின்று பிறகு தொடர்ந்து செல்லவேண்டும்.இது நமது முன்னோர் அறிவுரை.

உணர்த்தும் நிலவரம்:
#காட்டுப் பயணத்தையும், நாட்டுப் பயணத்தையும் ஒன்றாய் குழப்பி விட்டோம்
#பூனைக்கும் சிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டோம்.

உணர வேண்டியது:
#பாவம் பூனைகள்