Friday, April 24, 2009
அதுக்குள்ள வந்தாச்சா அட்சய திரிதியை...
அதுக்குள்ள வந்துட்டுதே !
அதுக்குள்ள வந்துட்டுதே !!
அவசரமா போகணுமே
அடகுவேற வைக்கணுமே
காட்டுவேலய முடிச்சுட்டு
கடவீதிக்கு ஓடணுமே
மவராசன் டீவிப் பொட்டியில
மருகி உருகி சொல்லுதானே
தங்கம் வாங்கி சேத்துவச்சா
தங்கி பெருகிப் போயிருமாமே
போன வருசம் வந்த
அச்சய திரிதியைக்கு வாங்குன
ஆறுகிராம் கம்மல கழட்டி
அடகு வச்சே தீரணுமே
இந்த அச்சய திரிதியைக்கு
இருக்குற காச வச்சு
மூணுகிராமுல முழுசா ஒரு
மூக்குத்தியாவது வாங்கணுமே
இருட்டுக்குள்ள போகணுமே
இன்னைக்கு எப்படியும் கெடைக்கணுமே
எங்கபோயி காசுகேக்க
எவகிட்டப்போயி அடகு வைக்க
ஆறு கிராமு வாங்கி வைச்சா
நூறா ஆயிருமுன்னு சொன்னானே ?
மூணு வாங்குறதுக்குள்ளேயே
மூச்சு முட்டீரும் போலிருக்கே !
எனக்கு ஒன்னுமே புரியலியே !
என்ன செய்யனுமுன்னும் தெரியலியே !!
Labels:
மூட நம்பிக்கை
Thursday, March 19, 2009
வளர்ச்சியா? வீக்கமா?
எங்கும் தமிழ்!
எதிலும் தமிழ்!!
தமிழகத்தில் இப்போது
தமிழ் வளர்ப்போர் எண்ணிக்கை
தாறுமாராய்க் கூடி விட்டது
விளம்பரப் பலகைகளில்
வரிக்கு வரி தமிழ்
பார்த்தால் தமிழ் போல தெரியும்!
அதையே பிறர் படிக்கும் போது
கேட்டால் ஆங்கிலம் போலப் புரியும்!!
அப்படியொரு அற்புத வளர்ச்சி!!!
பொங்கு தமிழ் இப்போது
புதிய பரிமாணத்தை நோக்கி
இது அபரிதமான வளர்ச்சியா?
இல்லை,விபரீதமான பிறழ்ச்சியா??
வீக்கத்திற்கும் வளர்ச்சிக்கும்
வித்தியாசம் தெரியாத
வீணர்களாகிக் கொண்டிருக்கிறோம்!
அன்னைத் தமிழை நாம்
அலங்கோலப் படுத்திகொண்டிருக்கிறோம்!!
XXXXXX சில்க்ஸ்
XXXXXX ஜுவல்லர்ஸ்
XXXXXX ரெடிமேட்ஸ்
XXXXXX ஸ்டுடியோஸ்
XXXXXX கார்மெண்ட்ஸ்
XXXXXX ஸ்டோர்ஸ்
XXXXXX பேங்க்
XXXXXX பங்க்
XXXXXX ஹோட்டல்
XXXXXX ரெஸ்ட்டாரன்ட்
XXXXXX ஹாஸ்ப்பிடல்
XXXXXX மெடிக்கல்
...................
...................
இவை ஒரு சிலதான்
இருக்கிறது ஊரெல்லாம்
இதுபோல இன்னும் பல
இவை எல்லாமே தமிழ்தான்!
இதில் எங்கே இருக்கிறது தமிழ்?
உண்மை நிலை உணர்த்துவோம்
உயிர் தமிழ் (மட்டும்) வளர்ப்போம்
Labels:
தமிழ்
Wednesday, March 18, 2009
நான் பாசாயிட்டேன்.,அப்போ நீங்க..???
கடைசி கட்ட திறனாய்வுச் சோதனை அது
நூறு பேர் காத்திருக்கிறோம் ஆய்வுக்கூடத்தில்
ஒருவர் மட்டுமே தேர்வாவார் கடைசியில்
சோதனை மேடையின் மேல்
திரைச்சீலை மறைப்பிற்கு பின்
கறைபடிந்த கழிப்பறைக் கோப்பையும்
கறை நீக்கும் திரவங்களின் அணிவகுப்பும்
கலக்கத்தோடு காத்திருக்கிறோம் நாங்கள்
கலக்கலாய் வந்து சேருகிறார் ஆசிரியர்
வழங்கினார் அக்கமாலா/கப்சி குளிர்பானம் அனைவருக்கும்
வைத்துகொண்டார் கையில் ஒன்றை அவருக்கும்
"சோதனை ஆரம்பம்" என்றார்
திரைக்குப் பின்னால் சென்றார்
திரைக்கு விலக்கி வெளியே வந்தார்
திரையை நன்றாக நீக்கி நின்றார்
அந்த கறைபடிந்த கோப்பை
அங்கே பளபளப்பாய் இருந்தது
"உற்று கவனியுங்கள் பின்
நன்று கொண்டாடுங்கள்
சோதனை முடிந்துவிட்டது" என்றார்
சொல்லாமல் சென்று விட்டார்
அப்போதுதான் கவனித்தேன்
அவரது கையில் பானம்
அரை அளவுதான் இருந்தது
கவனித்துவிட்டேன் நான் என்பதை
கணித்துவிட்டார் அவரும்
"கிறுக்குப் பிடித்திருக்கிறதா இவருக்கு!
கேள்வியே கேட்க்காமல் சோதனையா?
கோமாளி வாத்தியார் இவர்!!"
கேலி செய்து கொண்டே
காலி செய்தனர் பானத்தை
என்னைத் தவிர அத்தனை பேரும்
வரிசையாய் வெளியே வந்தோம் கூடத்திலிருந்து
என்னைமட்டும் தனியே அழைத்தார் கூட்டத்திலிருந்து
"ஏன்?" என்றார் என்முழு பானத்தைக்காட்டி
"இதனாலா?" என்றேன் அவரது அரைபானத்தைக்காட்டி
"அதேதான்!,அதேதான்!!" என்றார் சிரித்தபடி
சந்தேகமே இன்றி நான் தேர்ச்சி பெற்றேன்
சந்தேகம் நீங்கி என் வீடு சென்றேன்
நீதி:(காசை வாங்க்கிகிட்டு) நடிகர்கள் சொல்றாங்கன்னு
காசைக்கொடுத்து கண்டதையும் வாங்கிக் குடிக்காதீங்க
(பி.கு:இது கவிதை அல்ல)
Labels:
உணவு
Saturday, February 7, 2009
ஆமை புகுந்த வீடு உருப்படாது....
இன்றைய நிலவரம்:
இந்த பழமொழியைச் சொல்லியே உலகில் அதிக நாள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆமையை ராசி இல்லாத மிருகத்தின் அடையாளமாகச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறோம்.
நமது முன்னேற்றத்தை அது தடுப்பதாக பழி சுமத்திக் கொண்டிருக்கிறோம்.
முன்னோர் சொன்னது:
கல்லாமை,உண்மை பேசாமை,பெரியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை போன்ற ஆமைகள் புகுந்தால் அந்த வீடு முன்னேறுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.எனவே, இந்த இல்லாமைகள் அகற்றி வாழ்க்கையில் இன்புற வேண்டும்
ஒரு சிறிய ஆய்வு:
ஆமையின் அதிகப்பட்ச வேகம் நிமிடத்திற்கு 14 அடி தூரமாகும்.இந்த வேகத்தில் வரும் ஆமை வீட்டின் சுற்றுச் சுவரின் முகப்புவாயிலின் வழியே முற்றம் கடந்து,திண்ணை தாண்டி, படியில் ஏறி, வாசலுக்குள் நுழைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை யூகித்துகொள்ளுங்கள். அவ்வளவு நேரம் ஒரு வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமலும்,வீட்டில் உள்ளவர்கள் சோம்பலோடும்,வாசல் கதவு திறந்தும் கிடந்தால் அந்தவீடு சிறக்க எந்த வகையிலாவது வாய்ப்பு உண்டா என்பதையும் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
நீதி:
விலங்குகளின் மேல் பழி போடாமல்
நம்மைத் திருத்திக் கொண்டாலே நன்மை பிறக்கும்
Labels:
பழமொழி
Sunday, February 1, 2009
பிள்ளையார் சுழி...?!
பிள்ளையார் சுழி :
சுப காரியங்களைப் பற்றி எழுத ஆரம்பிப்பதற்கு முன்னால்,கடிதம் எழுதுவதற்கு முன்னால், தற்சமயம் தேர்வு எழுதுவதற்கு முன்னாலும் கூட பிள்ளயார் சுழி போட்டபின் ( 'உ' ம் அதன் கீழ் '=' இரண்டு அடிக்கோடுகளும் ) தான் ஆரம்பிக்கிறோம் இது கிட்டத்தட்ட சட்டமாகவே ஆகும் சூழலில் தான் தற்போது உள்ளது
நிலவரம் :
பிள்ளையார் :
கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கும், எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிள்ளையார் வழிபாடு தமிழ் நாட்டுக்குள் ( குறிப்பாக வாதாபியில் இருந்து )வந்தததாக தமிழக வரலாறு பற்றிய குறிப்புகளில் பதிவாகி உள்ளது
கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தில் பிள்ளையார் பற்றிய சான்றுகள் எதுவும் தமிழ் இலக்கியங்களிலும் ,பதிவுகளிலும்,ஆராய்சிகளிலும் காணப்படவில்லை
பிள்ளையார் சுழி : கி.பி இரண்டாம் நூற்றாண்டு ஓலைச் சுவடிகளின் ஓரத்தில் பிள்ளையார் சுழியை ஒத்த எழுத்துக்கள் ( '0' ம் அதனைத் தொடர்ந்தோ அல்லது அடியிலோ '-' )காணப்படுகின்றன .இது அந்தக் காலத்தில் எழுதப் பயன்படும்ஒலையின் தரத்தை எழுதுவதற்கு தகுதியான ஈரப்பதத்தில் இருக்கிறதா என பரிசோதனை செய்து பார்ப்பதற்காக, எழுத்தாணியின் கூர்மையை சோதிப்பதற்காக, படைப்புகளை பதிய ஆரம்பிப்பதற்கு முன்னால் சோதனைக்காக இடப்பட்ட குறிகள் எனவும், நாளடைவில் '0' வும் '-' வும் சேர்ந்து 'உ' வாவக மாறியிருக்கலாம் எனவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது
உணரப்படும் உண்மை :
தமிழகத்தில் பிள்ளையாரின் காலத்திற்கு ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே புழக்கத்தில் வந்துவிட்ட குறியீட்டுக்கு எப்படி பிள்ளயார் சுழி என்ற பெயர் வந்தது? .எனில், அந்தப் பெயர் கி.பி எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே வந்திருக்க வேண்டும், அப்படியெனில்,அதற்கு முன்னால் அதன் பெயர் என்னவாக இருந்தது ?
உணர வேண்டிய உண்மை :
இன்று பளபளப்பான காகிதமும்,பளிங்குபோல வழுக்கிச் சென்று எழுதும் பந்து முனை எழுதுகோல்களும் (பால் பாய்ண்ட் பேனா )தான் உபயோகத்தில் உள்ளன. இதன் தரம் சோதித்து அறிய வேண்டிய தேவை எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை
உணர்த்தும் நீதி :
செம்மறியாட்டு மந்தையில் முன் செல்லும் ஆடு குதித்துத் தாண்டிச் செல்லும் இடத்தை,அங்கே எந்தவித தேவையும் இடர்பாடும் இல்லாவிட்டாலும் மற்றவைகளும் குதிதுத் தாண்டியேச் செல்கின்றன............
Labels:
கடவுள்
Friday, January 30, 2009
களவும் கற்று மற...!!
நீதிமன்றம்.
தீர்ப்பு நேரம்.
குற்றவாளிக் கூண்டில் திருடன்.
நீதிபதி :"கடைசியாக எதும் சொல்ல விரும்புகிறாயா?"
குற்றவாளி :
"ஆமாம் அய்யா,பெரியவங்களே சொல்லி இருக்காங்க 'களவும் கத்து மற'ன்னு .அதலானதான் செஞ்சுபுட்டேன்.
இனிமே திருட மாட்டேன்,இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுருங்கய்யா"
நீதிபதி குழம்பிப் போகிறார்
'இப்படி ஒரு பழமொழி எப்படி வந்தது?
எதற்காக வந்தது?
எல்லா கலைகளையும் கற்றுக்கொள் என்று அறிவுறுத்த அப்படி சொல்லி இருப்பார்களா? முன்னோர் வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டாமா?'
விடை தெரியவில்லை.குழப்பம் நீடிக்கிறது
இன்றைய நிலவரம் :-
எல்லாதரப்பினரையும் குழப்பும் வண்ணம் புரையோடிப்போய் கிடக்கிறது அந்தப் பழமொழி
உண்மை நிலவரம் :-
"களவும் கத்தும் மற"என்பது தான் அந்த உண்மையான பழமொழி
திருட்டையும் பொய்பேசுவதையும் (கத்து=பொய் சொல்லல்)மறக்க வேண்டுமமென்பதே இதன் பொருள்.
இது காலப்போக்கில் 'களவும் கற்று மற' என்று மருவி இருக்கிறது அல்லது மாற்றி இருக்கிறார்கள்
உணர்த்தும் உண்மை :- திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் காலப் போக்கில் உண்மை பொல மாறி விடுகிறது
Labels:
பழமொழி
Tuesday, January 20, 2009
தீப ஆராதனை.!
இது நிகழ் காலம்
பூசை நேரம்
மின் விளக்குகளின் வெளிச்ச வெள்ளம்.
பகல்போல காட்சி அளிக்கும் கோவில் பிரகாரம்.
பாதரச விளக்கொளியில் பளபளக்கும் கற்ப கிரகம்.
அலங்கார விளக்குகளால் சூழப்பட்டுள்ள கடவுள்.
கடவுள் முன் காட்டப்படும் தீப ஆராதனை முடியும் தருவாயில்,
கடவுளை விட்டு தீபத்தை விலக்கி உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
பக்தர்கள் அனைவரும் இருகரம் தலைக்கு மேல்கூப்பி அந்த தீபத்தை வணங்குகிறார்கள்
சிறிது பின் நோக்கிச் செல்வோம் !
கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளுங்கள்
முன்னோர்களின் அந்தக்காலம்
மின் வசதி இல்லாத நேரம்
இருண்ட கற்ப கிரகம்
கடவுள் முகம் பார்க்க கண் இமைக்காமல் நெடுநேரம் காத்திருக்கிறார்கள் பக்தர்கள்.
முன் அறிவிப்பில்லாமல்,யாரும் எதிர்பார்க்காத ஒரு நொடியில்
தீபமேற்றி கடவுள் முகம் முன்னால் காட்டுகிறார்கள்.
திடீரென பரவும் ஒளியில் (ப்ளாஷ் லைட்)தெரியும் கடவுளின் பிம்பம்
புகைப்படம் போல மனதுக்குள் அப்படியே படிகிறது
மக்கள் இருகரம் கூப்பி பரவசத்தோடு கடவுளை வணங்குகிறார்கள்
மீண்டும் நிகழ்காலம் வருவோம்!
இடைப்பட்ட காலத்தில்
கடவுளிடம் இருந்து நம்மையும் அறியாமல்
தீபத்தை நோக்கித் திசை திரும்பி இருக்கிறோம்/திருப்பி விடப்பட்டிருக்கிறோம்
Labels:
கடவுள்
Monday, January 19, 2009
சைவம் என்றால்...?!?!????
சைவ உணவு என்றால் என்ன?
எவை எல்லாம் சைவ உணவுகள் ?
புலால் உணவு/மிருக பகுதிகள் தவிர்த்த அனைத்தும் சைவ உணவாகும்.
தாவரங்கள் சார்ந்த,செடிகளில் இருந்து கிடைக்கும் தாணியங்கள்,காய் கறிகள்,பழங்கள், மர வகை உணவுகள்,பால்,வெண்ணை, நெய் அனைத்தும் சைவ உணவுகள்.
கொஞ்சம் சரியா என்று பார்ப்போமா?
# ஐஸ் க்ரீம்கள்,சாக்லேட்டுகள்,கேக்குகள் போன்றவை குளிர் சாதனப் பெட்டிக்குள் இல்லாத சமயங்களில் அதன் திடத் தன்மையை நீடிக்க ஜெலாட்டின் என்ற மிருகக் கொழுப்பு வகையும்,முட்டையும் சேர்க்கப்படுகிறது.
# பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அப்படியே சாப்பிடும் உணவு வகைகள்(ப்ரெஞ்சு ப்ரைஸ் போன்றவை) பெருப்பாலும் மாட்டுக் கொழுப்பு கலந்த எண்ணையில் தான் பொறித்து எடுக்கப் படுகிறது
# துரித உணவு வகைகளின் (பாஸ்ட் புட்) அடிப்படையான சீஸ்_ல் கன்று குட்டியின் குடலிலிருந்து எடுக்கப்படும் என்சைம்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன
# பால் சார்ந்த இனிப்பு வகைகளின் (மில்க் ஸ்வீட்) மேல் ஒட்டப்பட்டிருக்கும் பளபளப்பான வெள்ளி இழைகள் (சில்வர் லேயர்) மெல்லியதாக தயாரிக்க மாட்டின் குடல் உபயோகப்படுத்தப் படுகிறது.மாட்டின் சூடான இரண்டு குடல் தட்டுகளுக்கு இடையே வெள்ளி மூலப்பொருள் வைக்கப்பட்டு அழுத்தம் கொடுத்து மெல்லிய இழைகளாக மாற்றப்படுகிறது
# ஆப்பிள் போன்ற பழங்கள் நீண்ட நாள் வாடாமல் இருக்க மெழுகும்,கொழுப்பும் கலந்த கலவை பூசப்படுகிறது
# தாணியங்கள்,காய்கறிகள் நல்ல விளைச்சலைத் கொடுக்கவும் நெடு நாள் கெடாமல் இருக்கவும் அவற்றின் விதைகளில் மரபணுச் சோதனைகள் மூலம் மிருக மூலக்கூறுகள்,அணுக்கள் (டி என் ஏ) சேர்க்கப்படுகின்றன
மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருவோம்!
சைவ உணவு என்றால் என்ன?
?????????????????????????????????????
எவை எல்லாம் சைவ உணவுகள் ?
???????????????????????????????????
?????????????????????????????????????
Labels:
உணவு
Wednesday, January 14, 2009
தை பிறந்தால் வழி.....!?
முன்னோர் மொழி : "தை பிறந்தால் வழி பிறக்கும் "
நடை முறை : ." இப்போ ஏன் வீணா முயற்சிப் பண்ணிக்கிட்டு.
தை பொறக்கட்டும் அப்புறமா பாக்கலாம்"
"தை பொறந்தா ஏதாவது வழி பொறக்காமலா போயிரும்"
இப்படிச் சொல்லிகொண்டு தான்
இன்றைய தலைமுறை செல்வங்கள்
இயலாமையால் சோம்பிப் போய் கிடக்கின்றனர்.
கொடுக்கும் சாமி எப்படியும்
கூரையைப் பிய்த்துக்கொண்டுதான் கொடுக்கும்,
ஏன் அவருக்கு சிரமம்,
என்று கூரையை பிரித்துவைத்து, வானம் பார்த்து, வாய் பிளந்து காத்திருப்போரும் இருக்கிறார்கள்.முன்னோர் வாக்கை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் வாழ்க்கை இழந்து கொண்டிருக்கிறார்கள்
உண்மையில் : அக்காலத்தில் வயல் வெளியில் தை மாதத்தில் கதிர்கள் அறுவடைக்குத் தயாராகி, தலை சாய்த்து, வரப்புகளின் மேல் படர்ந்து, நடந்து செல்ல வழி இல்லாமல், பாதைகளை மறைத்து இருக்கும்.தையில் அறுவடை முடிந்த பிறகே மேற்கொண்டு தொடர்ந்து செல்ல வழி பிறக்கும்.
மேலும் அறுவடை முடிந்த பின்புதான் கடனில் மூழ்கி இருக்கும் விவசாயின் வாழ்க்கையிலும் நல்ல வழி பிறக்கும்
உணர்த்தும் நிலவரம் : இந்த தையில் விழித்து உழைக்க அரம்பித்தால் அடுத்த தையில் பலரது வாழ்க்கையில் வழிபிறக்க காரணமாய் இருக்கலாம்
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
Labels:
பழமொழி
Subscribe to:
Posts (Atom)