Friday, January 30, 2009

களவும் கற்று மற...!!



நீதிமன்றம்.
தீர்ப்பு நேரம்.
குற்றவாளிக் கூண்டில் திருடன்.
நீதிபதி :"கடைசியாக எதும் சொல்ல விரும்புகிறாயா?"
குற்றவாளி :
"ஆமாம் அய்யா,பெரியவங்களே சொல்லி இருக்காங்க 'களவும் கத்து மற'ன்னு .அதலானதான் செஞ்சுபுட்டேன்.
இனிமே திருட மாட்டேன்,இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுருங்கய்யா"

நீதிபதி குழம்பிப் போகிறார்
'இப்படி ஒரு பழமொழி எப்படி வந்தது?
எதற்காக வந்தது?
எல்லா கலைகளையும் கற்றுக்கொள் என்று அறிவுறுத்த அப்படி சொல்லி இருப்பார்களா? முன்னோர் வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டாமா?'

விடை தெரியவில்லை.குழப்பம் நீடிக்கிறது

இன்றைய நிலவரம் :-
எல்லாதரப்பினரையும் குழப்பும் வண்ணம் புரையோடிப்போய் கிடக்கிறது அந்தப் பழமொழி

உண்மை நிலவரம் :-
"களவும் கத்தும் மற"என்பது தான் அந்த உண்மையான பழமொழி
திருட்டையும் பொய்பேசுவதையும் (கத்து=பொய் சொல்லல்)மறக்க வேண்டுமமென்பதே இதன் பொருள்.
இது காலப்போக்கில் 'களவும் கற்று மற' என்று மருவி இருக்கிறது அல்லது மாற்றி இருக்கிறார்கள்

உணர்த்தும் உண்மை :- திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் காலப் போக்கில் உண்மை பொல மாறி விடுகிறது

Tuesday, January 20, 2009

தீப ஆராதனை.!






இது நிகழ் காலம்
பூசை நேரம்
மின் விளக்குகளின் வெளிச்ச வெள்ளம்.
பகல்போல காட்சி அளிக்கும் கோவில் பிரகாரம்.
பாதரச விளக்கொளியில் பளபளக்கும் கற்ப கிரகம்.
அலங்கார விளக்குகளால் சூழப்பட்டுள்ள கடவுள்.
கடவுள் முன் காட்டப்படும் தீப ஆராதனை முடியும் தருவாயில்,
கடவுளை விட்டு தீபத்தை விலக்கி உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
பக்தர்கள் அனைவரும் இருகரம் தலைக்கு மேல்கூப்பி அந்த தீபத்தை வணங்குகிறார்கள்

சிறிது பின் நோக்கிச் செல்வோம் !
கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளுங்கள்
முன்னோர்களின் அந்தக்காலம்
மின் வசதி இல்லாத நேரம்
இருண்ட கற்ப கிரகம்
கடவுள் முகம் பார்க்க கண் இமைக்காமல் நெடுநேரம் காத்திருக்கிறார்கள் பக்தர்கள்.
முன் அறிவிப்பில்லாமல்,யாரும் எதிர்பார்க்காத ஒரு நொடியில்
தீபமேற்றி கடவுள் முகம் முன்னால் காட்டுகிறார்கள்.
திடீரென பரவும் ஒளியில் (ப்ளாஷ் லைட்)தெரியும் கடவுளின் பிம்பம்
புகைப்படம் போல மனதுக்குள் அப்படியே படிகிறது
மக்கள் இருகரம் கூப்பி பரவசத்தோடு கடவுளை வணங்குகிறார்கள்

மீண்டும் நிகழ்காலம் வருவோம்!
இடைப்பட்ட காலத்தில்
கடவுளிடம் இருந்து நம்மையும் அறியாமல்
தீபத்தை நோக்கித் திசை திரும்பி இருக்கிறோம்/திருப்பி விடப்பட்டிருக்கிறோம்

Monday, January 19, 2009

சைவம் என்றால்...?!?!????


சைவ உணவு என்றால் என்ன?
எவை எல்லாம் சைவ உணவுகள் ?

புலால் உணவு/மிருக பகுதிகள் தவிர்த்த அனைத்தும் சைவ உணவாகும்.
தாவரங்கள் சார்ந்த,செடிகளில் இருந்து கிடைக்கும் தாணியங்கள்,காய் கறிகள்,பழங்கள், மர வகை உணவுகள்,பால்,வெண்ணை, நெய் அனைத்தும் சைவ உணவுகள்.

கொஞ்சம் சரியா என்று பார்ப்போமா?

# ஐஸ் க்ரீம்கள்,சாக்லேட்டுகள்,கேக்குகள் போன்றவை குளிர் சாதனப் பெட்டிக்குள் இல்லாத சமயங்களில் அதன் திடத் தன்மையை நீடிக்க ஜெலாட்டின் என்ற மிருகக் கொழுப்பு வகையும்,முட்டையும் சேர்க்கப்படுகிறது.

# பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அப்படியே சாப்பிடும் உணவு வகைகள்(ப்ரெஞ்சு ப்ரைஸ் போன்றவை) பெருப்பாலும் மாட்டுக் கொழுப்பு கலந்த எண்ணையில் தான் பொறித்து எடுக்கப் படுகிறது

# துரித உணவு வகைகளின் (பாஸ்ட் புட்) அடிப்படையான சீஸ்_ல் கன்று குட்டியின் குடலிலிருந்து எடுக்கப்படும் என்சைம்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன

# பால் சார்ந்த இனிப்பு வகைகளின் (மில்க் ஸ்வீட்) மேல் ஒட்டப்பட்டிருக்கும் பளபளப்பான வெள்ளி இழைகள் (சில்வர் லேயர்) மெல்லியதாக தயாரிக்க மாட்டின் குடல் உபயோகப்படுத்தப் படுகிறது.மாட்டின் சூடான இரண்டு குடல் தட்டுகளுக்கு இடையே வெள்ளி மூலப்பொருள் வைக்கப்பட்டு அழுத்தம் கொடுத்து மெல்லிய இழைகளாக மாற்றப்படுகிறது

# ஆப்பிள் போன்ற பழங்கள் நீண்ட நாள் வாடாமல் இருக்க மெழுகும்,கொழுப்பும் கலந்த கலவை பூசப்படுகிறது

# தாணியங்கள்,காய்கறிகள் நல்ல விளைச்சலைத் கொடுக்கவும் நெடு நாள் கெடாமல் இருக்கவும் அவற்றின் விதைகளில் மரபணுச் சோதனைகள் மூலம் மிருக மூலக்கூறுகள்,அணுக்கள் (டி என் ஏ) சேர்க்கப்படுகின்றன

மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருவோம்!

சைவ உணவு என்றால் என்ன?
?????????????????????????????????????
எவை எல்லாம் சைவ உணவுகள் ?
???????????????????????????????????
?????????????????????????????????????

Wednesday, January 14, 2009

தை பிறந்தால் வழி.....!?


முன்னோர் மொழி : "தை பிறந்தால் வழி பிறக்கும் "

நடை முறை : ." இப்போ ஏன் வீணா முயற்சிப் பண்ணிக்கிட்டு.
தை பொறக்கட்டும் அப்புறமா பாக்கலாம்"

"தை பொறந்தா ஏதாவது வழி பொறக்காமலா போயிரும்"

இப்படிச் சொல்லிகொண்டு தான்
இன்றைய தலைமுறை செல்வங்கள்
இயலாமையால் சோம்பிப் போய் கிடக்கின்றனர்.
கொடுக்கும் சாமி எப்படியும்
கூரையைப் பிய்த்துக்கொண்டுதான் கொடுக்கும்,
ஏன் அவருக்கு சிரமம்
,
என்று கூரையை பிரித்துவைத்து, வானம் பார்த்து, வாய் பிளந்து காத்திருப்போரும் இருக்கிறார்கள்.முன்னோர் வாக்கை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் வாழ்க்கை இழந்து கொண்டிருக்கிறார்கள்

உண்மையில் : அக்காலத்தில் வயல் வெளியில் தை மாதத்தில் கதிர்கள் அறுவடைக்குத் தயாராகி, தலை சாய்த்து, வரப்புகளின் மேல் படர்ந்து, நடந்து செல்ல வழி இல்லாமல், பாதைகளை மறைத்து இருக்கும்.தையில் அறுவடை முடிந்த பிறகே மேற்கொண்டு தொடர்ந்து செல்ல வழி பிறக்கும்.
மேலும் அறுவடை முடிந்த பின்புதான் கடனில் மூழ்கி இருக்கும் விவசாயின் வாழ்க்கையிலும் நல்ல வழி பிறக்கும்

உணர்த்தும் நிலவரம் : இந்த தையில் விழித்து உழைக்க அரம்பித்தால் அடுத்த தையில் பலரது வாழ்க்கையில் வழிபிறக்க காரணமாய் இருக்கலாம்

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !